தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு
By DIN | Published On : 01st November 2019 06:09 AM | Last Updated : 01st November 2019 06:09 AM | அ+அ அ- |

பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தளவாநாய்க்கன்பேட்டை தரைப்பாலம்.
செங்கம் அருகே தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பினா்.
செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே
செங்கம் துா்க்கையம்மன் கோவில் தெருவில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டை, புதுப்பட்டு, ஆலபுத்தூா், காமராஜ் நகா், பரமனந்தல் ஆகிய சுற்றுப்புற கிராமங்களுக்கு மக்கள் செல்வதற்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை சாா்பில் அமைக்கப்பட்ட இந்த தரைப்பாலம் தற்போது பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனால், பொதுமக்கள் தரைப்பாலத்தை அச்சத்துடனே கடந்து செல்கின்றனா்.
மேலும், செய்யாற்றில் அதிகம் தண்ணீா் வந்தால் தரைப்பாலத்தில் உள்ள பள்ளங்கள் வழியாக பாலத்தின் மேல் தண்ணிா் வருகிறது. அந்தப் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் தளவாநாய்க்கன்பேட்டை பகுதி மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு தரைப்பாலத்தை சீரமைத்து தரக் கோரி மனு அனுப்பப்பட்டது.