16,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை: அமைச்சர் சேவூர்.இராமச்சந்திரன் தகவல்
By DIN | Published On : 01st September 2019 04:00 AM | Last Updated : 01st September 2019 04:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேருக்கு விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.
இராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் நகராட்சிக்கு உள்பட்ட 39 வார்டுகளில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் கே.
அமுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஒய்.சுரேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அங்கன்வாடி பணியாளர்கள் 2127 பேருக்கு செல்லிடப்பேசிகளை வழங்கினார்.
பின்னர், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவர் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற்றதில், 38 ஆயிரத்து 819 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
இதில் ஓய்வூதியம் மற்றும் வீட்டு மனைப் பட்டா கோரி அதிகம் பேர் மனுக்கள் அளித்துள்ளனர். பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, 16 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்.
மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், 32 ஏரிகள், 5 அணைகள் ரூ.16.07 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.வேளாண்மைத் திட்டத்தின் கீழ் 3.20 லட்சம் ஹெக்டேரில் பயிர்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்றார்.
முகாமில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஆரணி பாரி பி.பாபு, முன்னாள் கூட்டுறவு ஒன்றிய மாநிலத் தலைவர் அமுதா அருணாச்சலம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, முன்னாள் எம்.பி ஆர்.வனரோஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.கே.அரங்கநாதன், சுரேஷ்குமார், அதிமுக நகரச் செயலர் ஜெ.செல்வம், ஒன்றியச் செயலர்கள் ஏ.கே.குமாரசாமி, டி.பி.என்.பாஷியம், ராஜா (எ) வி.தேவராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பி.கந்தன், தனி வட்டாட்சியர்கள் சி.பன்னீர்செல்வம், மணிமாறன், வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் மு.இளையராஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசி...
செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம், நல்லாலம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசிகளை வழங்குகினார். தூசி கே.மோகன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.