பாஜக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி
By DIN | Published On : 11th September 2019 09:21 AM | Last Updated : 11th September 2019 09:21 AM | அ+அ அ- |

மத்திய பாஜக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. மிகப் பெரிய மோட்டார் நிறுவனமான அசோக் லேலண்ட் வேலை நாள்களைக் குறைத்துள்ளது.
வாகன உற்பத்தியில் இதுவரை 3.50 லட்சம் வேலைவாய்ப்புகளை நாம் இழந்துள்ளோம். பார்லி பிஸ்கட் நிறுவனம் 10 ஆயிரம் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. பங்குச் சந்தையில் இருந்து அந்நிய மூலதனம் உடனே வெளியேற்றப்பட்டுள்ளது.
எந்த வகையில் பார்த்தாலும் இப்போது ஒரு பொருளாதாரச் சுனாமி ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மத்திய அரசு விழித்துக் கொண்டிருக்கிறது.
புதிதாக ஒரு வைரஸ் பரவும்போது அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று ஆரம்பத்தில் யாருக்கும் புரியாது. அதுபோல, இந்தப் பொருளாதார வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை முடிவு செய்வதற்கான தகுதியான நபர்கள் மத்திய அரசில் இல்லை.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியிலும், இப்போதைய 100 நாள் ஆட்சியிலும் பாஜக அரசு ஏதாவது ஒரே ஒரு துறையில் சாதித்திருப்பதாகச் சொல்வார்களானால் அது ஒரு மிகப் பெரிய செய்தியாக அமையும்.
ஒரு துறையில் கூட பாஜக அரசால் சாதிக்க முடியவில்லை. அனைத்துத் துறைகளிலும் அடுக்கடுக்கான வீழ்ச்சியை மத்திய அரசு சந்தித்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை மறைக்கவே எல்லையில் பிரச்னை என்று கூறுகின்றனர்.
காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்குகின்றனர். ஆனால், வட கிழக்கு மாநிலங்களில் அந்த சட்டப் பிரிவு அப்படியே இருக்கும் என்று சொல்கின்றனர். இந்த பாரபட்சம் ஏன் என்று புரியவில்லை.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் அறப்போராட்டம் நடத்தியது. வன்முறையில் காங்கிரஸ் ஒருபோதும் ஈடுபடாது.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்தின்போது பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.
இந்தியாவில் ஏற்கெனவே மோட்டார் வாகனத் தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் எந்த மோட்டார் வாகன நிறுவனமாவது தங்களது முதலீட்டை இந்தியாவில் செய்வார்களா என்ற சந்தேகம் எழுகிறது. என்னுடைய பார்வையில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் பெரிய வெற்றி இருப்பதாகத் தெரியவில்லை.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றியது மரபுப்படி சரியில்லை. இதன் மூலம் நல்ல அதிகாரிகளை மத்திய அரசு தொடர்ந்து இழந்து வருகிறது என்றார்.
பேட்டியின்போது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.