பெரணமல்லூர் தனி வட்டம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு
By DIN | Published On : 11th September 2019 09:22 AM | Last Updated : 11th September 2019 09:22 AM | அ+அ அ- |

பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரணமல்லூர் பேரூராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியைச் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டம் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வட்டமாக உள்ளது. இந்த வட்டத்தில் 8 குறு வட்டங்களும், 161 வருவாய் கிராமங்களும் உள்ளன. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த வட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
குறிப்பாக, பெரணமல்லூர் ஒன்றியத்தில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த நிலையில், பெரணமல்லூருக்கும், வந்தவாசிக்கும் இடையே 25 கி.மீ. தொலைவு உள்ளதால் பொதுமக்கள் அலுவலகப் பணிக்காக வந்தவாசிக்கு சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர்.
பெரணமல்லூரில் மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. எனவே, வந்தவாசி வட்டத்தைப் பிரித்து பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, இந்த கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.