மணல் கடத்தல்: டிராக்டர் ஓட்டுநரை பிடிக்க முயன்ற காவலருக்கு கால் முறிவு
By DIN | Published On : 11th September 2019 09:24 AM | Last Updated : 11th September 2019 09:24 AM | அ+அ அ- |

செங்கம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் ஓட்டுநரைப் பிடிக்க முயன்ற காவலர் விவசாயக் கிணற்றில் விழுந்ததில் கால்முறிவு ஏற்பட்டது.
செங்கத்தை அடுத்த மேல்செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் மலர் தலைமையில் போலீஸார் பாய்ச்சல் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாசுதேவன்பட்டு கிராமத்தில் இருந்து பாய்ச்சல் கிராமம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் நிறுத்த முற்பட்டனர்.
போலீஸாரைப் பார்த்ததும் டிராக்டர் ஓட்டுநர் வாசுதேவன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோபி (45) டிராக்டரை நிறுத்திவிட்டு விவசாயி நிலத்தில் இறங்கி தப்பி ஓடினார். இதைத் தொடர்ந்து அவரைப் பிடிக்க காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் சத்தியமூர்த்தி (30) பின்தொடர்ந்து ஓடினார்.
அப்போது, விவசாய நிலத்தில் இருந்த தரைதளக் கிணற்றில் காவலர் சத்தியமூர்த்தி விழுந்தார். தொடர்ந்து அவரை மீட்க போலீஸார் போராடினர். அதிகாலை நேரம் என்பதால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் போலீஸார் அவதிப்பட்டனர்.
பின்னர், செங்கம் டிஎஸ்பி சின்னராஜிக்கு தகவல் தெரிவித்து, தீயணைப்பு படையினர் வந்து சத்தியமூர்த்தியை கிணற்றில் இருந்து மீட்டனர்.
கிணற்றில் விழுந்த காவலர் சத்தியமூர்த்திக்கு கால்முறிவு ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து பாய்ச்சல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.