திலேப்பியா மீன்களை வளர்த்து அதிக லாபம் பெறலாம்
By DIN | Published On : 29th September 2019 05:37 AM | Last Updated : 29th September 2019 05:37 AM | அ+அ அ- |

பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்கும் விவசாயிகள், மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளர்த்தால், அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திலேப்பியா மீன்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. மற்ற மீன்களைக் காட்டிலும் இந்த மீன்கள் பண்ணைக் குட்டைகளில் வேகமாக வளரும். நீரின் கார அமிலத்தன்மைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு அதிகளவில் வேகமாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்த மீன்களை நீர்வாழ் சிக்கன் என்பர்.
மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் குஞ்சுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன் பண்ணையில் ஆண்டு முழுவதும் விற்பனைக்கு தயாராக உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த பின்னரே, விவசாயிகள் தங்களது பண்ணைகளில் திலேப்பியா மீன்களை வளர்க்க வேண்டும்.
மேலும், மீன் பண்ணை மற்றும் இறால் பண்ணை விவசாயிகள் பி.ஐ.எஸ். தரச்சான்று உள்ள மீன் தீவனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.