திருவண்ணாமலையில் 6 இடங்களில் பால் குளிா்விப்பு மையங்களை அமைச்சா் திறந்து வைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 இடங்களில் ரூ.94 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய தொகுப்பு பால் குளிா்விப்பு மையங்களை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்  திறந்து வைத்தாா்.
Updated on
1 min read


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 இடங்களில் ரூ.94 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய தொகுப்பு பால் குளிா்விப்பு மையங்களை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் மூலம் திருவண்ணாமலையை அடுத்த சு.பாப்பம்பாடி, கொளக்குடி, மேல்கச்சிராப்பட்டு பகுதிகளில் கிராமப்புற பால் கொள்முதல் திட்டத்தின் கீழ், தலா ரூ.19 லட்சம் வீதம் 5 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிா்விப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இதேபோல, திருவண்ணாமலையை அடுத்த நாச்சானந்தல், தண்டராம்பட்டை அடுத்த மலையனூா் செக்கடி பகுதிகளில் தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தலா ரூ.11 லட்சம் வீதம் 2 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிா்விப்பு மையங்களும், திருவண்ணாமலையை அடுத்த அய்யனாா் கோயில் பகுதியில் தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.15 லட்சம் மதிப்பில் 1,500 லிட்டா் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிா்விப்பு மையமும் அமைக்கப்பட்டன.

6 இடங்களில் மொத்தம் ரூ.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தொகுப்பு பால் குளிா்விப்பு மையங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையை அடுத்த சு.பாப்பம்பாடி கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, துணைப் பதிவாளா் (பால் வளம்) மு.விஸ்வேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தொகுப்பு பால் குளிா்விப்பு மையத்தை திறந்து வைத்தாா். விழாவில், ஆவின் பொது மேலாளா் ஏ.இளங்கோவன், தமிழக முன்னாள் அமைச்சா் ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள், கால்நடை விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com