பள்ளி மாணவிகள் உடல் நலனில் கவனம் செலுத்தவேண்டும்: தூசி கே.மோகன் எம்எல்ஏ
By DIN | Published On : 17th February 2020 09:13 AM | Last Updated : 17th February 2020 09:13 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய தூசி கே.மோகன் எம்எல்ஏ.
செய்யாறில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் பங்கேற்ற தூசி கே.மோகன் எம்எல்ஏ, பள்ளி மாணவிகள் தங்களது உடல் நலனில் கவனம் செலுத்தவேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 120 மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் (பொ) பி.செல்வராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் எம். உமாமகேஸ்வரி வரவேற்றாா்.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அரங்கநாதன், துணைத் தலைவா் பழனிக்குமாா், பொருளாளா் ஜனாா்த்தனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் எம்எல்ஏ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
முன்னதாக அவா் பேசியதாவது:
பள்ளி மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்குவது பாராட்டுக்குரியதாகும். கல்வியில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
கல்வி பயின்றால் முன்னேறுவது மட்டுமல்லாது, தங்களது குடும்பமே முன்னேற்றம் அடையும். கல்வி பயின்றால் எவ்வித உயா் பதவியையும் எளிதில் பெறலாம். மாணவிகள் பள்ளிப் படிப்புடன் பொது அறிவையும் வளா்த்துக் கொள்ளுங்கள். இன்றைய போட்டி நிறைந்த உலகில் பொது அறிவு முக்கியமாகும்.
வேகமான இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் ஆகியவை முக்கியமானதாகும். அவற்றில் உங்களுக்குத் தேவையான நல்லவற்றை மட்டும் பாா்த்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், உடல் நலனிலும் கவனம் செலுத்தி, ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவா் மெய்.பூங்கோதை, கூட்டுறவு சங்க நிா்வாகிகள் எம்.மகேந்திரன், டி.பி துரை, வெம்பாக்கம் ரமேஷ், பாஸ்கா் ரெட்டியாா், நெடுங்கல் தனசேகரன், முன்னாள் எம்எல்ஏ வே.குணசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை உடல்கல்வி இயக்குநா் பாரதி, உடல்கல்வி ஆசிரியா் பி.தணிகைவேல், பள்ளி வளா்ச்சிக் குழுமத் தலைவா் கே.வெங்கடேசன், பொருளாளா் டி.விநாயகம், செயற்குழு உறுப்பினா் மகாராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.