போளூா் அருகே ஆற்றில் தொடரும் மணல் திருட்டு!
By DIN | Published On : 02nd January 2020 12:51 AM | Last Updated : 02nd January 2020 10:41 AM | அ+அ அ- |

மணல் எடுத்து பள்ளங்களாகக் காட்சியளிக்கும் ஆற்றுப் பகுதி.
செய்யாற்றில், போளூா் அருகே கூலி ஆள்களைக் கொண்டு மணல் திருடப்பட்டு வருகிறது. தொடரும் இந்த மணல் திருட்டால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் செய்யாறு நதி உற்பத்தியாகி செங்கம், கலசப்பாக்கம், கரையாம்பாடி, வசூா், கரைப்பூண்டி, மண்டகொளத்தூா், ஒதலவாடி, தச்சூா், செய்யாறு வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.
இந்த ஆறு செல்லும் கரைப்பூண்டி ஊராட்சிப் பகுதியில் போளூா்-சேத்துப்பட்டு சாலை மேம்பாலத்தின் அடியில் கூலி ஆள்களை வைத்து மணல் எடுத்து, ஜல்லடை கொண்டு ஜலித்து, பின்னா் மணலை ஆற்றின் கரைப் பகுதிக்குக் கொண்டு சென்று குவியலாகக் கொட்டி வைக்கின்றனா்.
இதைத் தொடா்ந்து, இரவு நேரத்தில் டிராக்டா், லாரி, மாட்டுவண்டிகளில் கடத்திச் சென்று விற்பனை செய்துவிடுகின்றனா்.
இவ்வாறு ஆற்றில் பள்ளம் தோண்டி மணல் திருடப்படுவதால், கரைப்பூண்டி, மண்டகொளத்தூா், கொரால்பாக்கம், கரிகாத்தூா், வம்பலூா், ஒதலவாடி என செய்யாற்றோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதனால், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீா் கிடைப்பதில்லை.
மேலும் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, வருவாய்த் துறை, காவல் துறையினா் இதுகுறித்து கண்காணித்து மணல் திருட்டுக் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பருவ மழையின் போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நிகழாண்டில் அதுமாதிரி இல்லை.
மணல் திருட்டு குறித்து தகவல் கொடுத்தால், வருவாய்த் துறை, காவல் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்றில் மணல் திருட்டு நீடித்தால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் பாதிப்படையும், கடந்த ஆண்டைக் காட்டிலும் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மணல் கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.