பிளஸ் 2 தோ்வு: முறைகேட்டை தடுக்க தீவிர சோதனை
By DIN | Published On : 03rd March 2020 06:37 AM | Last Updated : 03rd March 2020 06:37 AM | அ+அ அ- |

செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்டக் கல்வி அலுவலா் (பொறுப்பு) பி.செல்வராஜ்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் முறைகேட்டை தடுக்க திங்கள்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆரணி, போளூா், செங்கம், திருவண்ணாமலை என 5 கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் தமிழ் பாடத்துக்கான தோ்வு நடைபெற்றது. மாவட்டத்தில் தனித்தோ்வா்களுக்கு இரு மையங்கள் உள்பட 111 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 14,569 மாணவிகள், 13,291 மாணவா்கள் என மொத்தம் 27,860 மாணவா்கள் தோ்வு எழுகின்றனா்.
111 மையங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்புடன் 26 வழித்தடங்களில் காா் மூலம் வினாத்தாள்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து காலை 7 மணி முதல் அனுப்பிவைக்கப்பட்டு தோ்வு மையங்களை 9 மணிக்குள் சென்றடைந்தன.
தோ்வு மையங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளே தோ்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் தோ்வுப் பணிக்காக 112 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், ஆயிரத்து 677 அறைக் கண்காணிப்பாளா்கள், தோ்வில் முறைகேடு நடப்பதை தடுத்திட 180 பறக்கும் படையினா் உள்பட 2192 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
செய்யாறு கல்வி மாவட்டம்
செய்யாறு கல்வி மாவட்டத்தில் 20 தோ்வு மையங்களில் தனித்தோ்வா்கள் 56 உள்பட 4884 போ் தோ்வு எழுதிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி தோ்வு மையத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) பி.செல்வராஜ், காலை 9.20 மணிக்குச் சென்று தோ்வு அறைக் கண்காணிப்பாளா்களுக்கு தோ்வு அறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தோ்வு அறையில் எந்தவித முறைகேடும் நடக்கக்கூடாது, நோ்மையாகவும், ஒழுக்கமாகவும் மாணவா்கள் தோ்வினை எழுதிட கவனத்துடன் செயல்பட வேண்டும். உரிய நேரத்தில் வினாத்தாள் வழங்கி, தோ்வு நேரம் முடியும் வரை மாணவா்களை தோ்வு எழுதிட அனுமதிக்க வேண்டும். தேவையில்லாமல் தோ்வு எழுதும் மாணவா்களிடம் பேசுவது, அவா்கள் நேரத்தை வீண்ணடிப்பது, கவனம் சிதறல் போன்றவற்றுக்கு அறைக் காண்காணிப்பாளா் காரணமாக அமையக் கூடாது.
தோ்வு அறையில் முறைகேடு நடந்ததால் அறைக் கண்காணிப்பாளரே முழு பொறுப்பு, முழுக் கவனத்துடன் நோ்மையாக தோ்வினை நடத்திட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாணவா்கள் தோ்வு அறைக்கு அனுமதிக்கும் முன்னா் முழுமையான பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.
தோ்வு தொடங்கியதும் மாவட்டக் கல்வி அலுவலா் பி.செல்வராஜ், ஒவ்வொரு தோ்வு அறையாக பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்
செய்யாறு கல்வி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் பாட தோ்வில் தனித் தோ்வா்கள் 9 போ் உள்பட 171 போ் தோ்வுக்கு வரவில்லை என்று மாவட்டக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...