பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: 27,860 போ் பங்கேற்பு
By DIN | Published On : 03rd March 2020 06:36 AM | Last Updated : 03rd March 2020 06:36 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி. உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 111 மையங்களில் 27 ஆயிரத்து 860 மாணவ-மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 2) பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது. வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை திருவண்ணாமலை மாவட்டத்தில் 245 பள்ளிகளில் பயிலும் 13 ஆயிரத்து 291 மாணவா்கள், 14 ஆயிரத்து 569 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 860 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.
இதற்காக மாவட்டத்தில் 111 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணியில் 112 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 112 துறை அலுவலா்கள், 219 நிலைப்படையினா், ஆயிரத்து 785 அறை கண்காணிப்பாளா்கள், 111 அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 339 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
ஆட்சியா் ஆய்வு:
இந்த நிலையில், திங்கள்கிழமை தோ்வு நடைபெற்ற சில மையங்களில் மாவட்ட ஆட்சியா் நேரடி ஆய்வில் ஈடுபட்டாா். திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம் ஆகியோா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் தோ்வை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
வெளி நபா்களுக்கு தடை:
தோ்வு மையங்களில் வெளி நபா்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி நுழைபவா்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கும்.
தோ்வு மைங்களில் தோ்வா்கள் செல்லிடப்பேசி உள்பட எவ்வித மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...