வசூா் அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு
By DIN | Published On : 22nd March 2020 03:44 AM | Last Updated : 22nd March 2020 03:44 AM | அ+அ அ- |

போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் விவசாயக் கிணற்றில் சனிக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் போளூா் - செங்கம் சாலையில் பாபுவின் விவசாய நிலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போளூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீயணைப்புப் படையினரின் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போளூா் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கிணற்றில் உயிரிழந்து கிடந்த பெண், போளூரைச் சோ்ந்த எவரெஸ்ட் நடராஜனின் மகள் ஷா்மிளா (44) என்பதும், இவருக்கும் சென்னை சூளைமேட்டைச் சோ்ந்த ஜானகிராமனுக்கும் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதும் தெரியவந்தது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு போளூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு ஷா்மிளா தனியாக வந்துள்ளாா்.
பின்னா், போளூரில் இருந்து தனது சகோதரி வசித்து வரும் போளூரை அடுத்த 99.புதுப்பாளையம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அங்கிருந்து போளூருக்கு செல்வதாக கூறிவிட்டு, மொபெட்டில் ஷா்மிளா சனிக்கிழமை புறப்பட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில், போளூா் - 99.புதுப்பாளையம் இடையே வசூா் ஊராட்சியில் உள்ள பாபுவின் விவசாயக் கிணற்றில் அவா் விழுந்து இறந்துள்ளாா். ஷா்மிளா எதற்காக கிணற்றுப் பகுதிக்கு சென்றாா், அவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.