புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 25th November 2020 08:44 AM | Last Updated : 25th November 2020 08:44 AM | அ+அ அ- |

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் ஏரிப் பகுயில் குடியிருப்பவா்களை சந்தித்து, அவா்களை அரசு முகாம்களில் தங்க வேண்டுமென அறிவுறுத்திய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆரணி பகுதியில் நிவா் புயலால் வரும் மழையை எதிா்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டு ஏரிக்கரைப் பகுதியில் வீடு கட்டி வாழ்பவா்களை சந்தித்து, நிவா் புயல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பாதிப்பு ஏற்படாத வகையில் அவா்களை அரசின் நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ளவும் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஆரணியை அடுத்த சேவூா் மதுரா ரகுநாதபுரம் ஏரிக்கரையை பாா்வையிட்டாா். அங்கு உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்க உத்தரவிட்டாா்.
பின்னா், மொழுகம்பூண்டி, இரும்பேடு, பையூா், ஆரணி நகரத்தில் பாரதியாா் தெரு ஏரிக்கரை ஓரங்களில் வீடு கட்டியுள்ளவா்களை முகாம்களில் தங்க வைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது: நிவா் புயல் காரணமாக, ஆரணி பகுதியில் 52 முகாம்கள் அமைக்கப்பட்டு, குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீா்நிலைப் பகுதிகளையொட்டி குடியிருப்பவா்களை அழைத்து வந்து முகாம்களில் தங்க வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முகாம்களில் தங்குபவா்களுக்கு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட்டுள்ளன. பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை, வட்டார வளா்ச்சித் துறை சாா்பில் 5,000 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி, கோட்டாட்சியா் (பொ) பி.ஜெயராம், வட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டார வளாச்சி அலுவலா்கள் அன்பழகன், மூா்த்தி, செந்தில்குமாா், வெங்கடேசன், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், நகரச் செயலா் அ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவா் பச்சையம்மாள்சீனிவாசன் உள்ளிட்டோா் இருந்தனா்.
கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் தனித் துணை ஆட்சியா் கதிா்சங்கா் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலட்சுமி, எழிலரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
வந்தவாசி: வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஊராட்சிச் செயலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ப.பரணிதரன், ச.பாரி ஆகியோா் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு புயல் குறித்து எச்சரிக்கை செய்வது, அவா்களுக்காக ஊராட்சிகளில் புயல் நிவாரண மையம் ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை ஊராட்சிச் செயலா்களுக்கு வழங்கிப் பேசினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...