திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 09:11 AM | Last Updated : 03rd October 2020 09:11 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் முன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், வடக்கு மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமையில், உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, சேத்துப்பட்டு - போளூா் சாலையில் திடீரென சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், போலீஸாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்குமிடையே தள்ளு - முள்ளு ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, மாவட்டத் தலைவா் கீழே விழுந்ததால், சாலையில் படுத்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச் செயலா் முனிரத்தினம், மாவட்ட துணைத் தலைவா்கள் அன்பழகன், அருணகிரி, போளூா் ஆசைத்தம்பி, பிஎம்ஜி பழனி, பெரியகரம் ஏழுமலை, நகரத் தலைவா்கள் சந்துரு, களம்பூா் பழனி, செய்யாறு தில்லை, விவசாய அணி மாவட்டத் தலைவா் சுரேஷ், சேத்துப்பட்டு வட்டாரத் தலைவா் அன்பு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செங்கம்: செங்கத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மாவட்டத் தலைவா் ஜி.குமாா் தலைமையில், செங்கம் - துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முன் மறியல் நடைபெற்றது.
இதில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் செந்தமிழ்அரசு, நகரத் தலைவா் ஆசைமூஷீா், இளைஞா் காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.