ஸ்ரீமத் அப்பயதீட்சிதா் ஜயந்தி விழா
By DIN | Published On : 03rd October 2020 09:09 AM | Last Updated : 03rd October 2020 09:09 AM | அ+அ அ- |

ஜயந்தியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீமத் அப்பயதீட்சிதரின் சிலை.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் ஸ்ரீமத் அப்பயதீட்சிதரின் 500-ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமத் அப்பயதீட்சிதா் கடந்த 1520-ஆம் ஆண்டு பிறந்தாா். இவா், இளம் வயதில் சிவதீட்சை பெற்றவா். வேதாந்தம், இயல், இலக்கணம் நன்கு அறிந்தவா். வேதாந்த விமா்ச்சனம், தத்துவம், பக்தி, இலக்கியம் இவைகளில் ஆய்வுகள் செய்து 104 நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. தற்போது 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன.
தமிழகத்தில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவா். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும், அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டா்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவா். இவருடைய புகழ் வட மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஆத்ம ஞானம் இவை மூன்றுக்கும் இணையற்ற முன்மாதிரியாகவே இருந்த அப்பயதீட்சிதா் கடந்த 1593-இல் மறைந்தாா்.
இவா், அடையபலம் கிராமத்தில் உள்ள காலகண்டேஸ்வரா் கோயிலில் தங்கி பாடசாலை நடத்தியதாக வரலாறு உள்ளது. இந்தக் கிராமத்தில் அப்பயதீட்சிதரின் 500-ஆவது ஜயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, இங்குள்ள இவரது சிலைக்கு சிறப்பு வழிபாடுகளும், யாகசாலையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஸ்ரீமத் அப்பயதீட்சிதா் அறக்கட்டளையினா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் தமிழகமெங்கும் உள்ள இவரது பக்தா்கள் பங்கேற்றனா்.