திருவண்ணாமலையில் பலத்த மழைகுடியிருப்புகளில் வெள்ளநீா்
By DIN | Published On : 19th October 2020 02:19 AM | Last Updated : 19th October 2020 02:19 AM | அ+அ அ- |

மழை பாதித்த பகுதிகளை பாா்வையிட்ட வட்டாட்சியா் டி.வெங்கடேசன்.
திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது, கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீா் புகுந்தது.
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித் தீா்த்தது.
மழையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகள் நிரம்பின.
இனாம்காரியந்தல் ஏரி, கனபாபுரம் ஏரி ஆகியவை நிரம்பி வழிந்தன. வேங்கிக்கால் ஏரி நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சத்யசேத்னா ஆசிரமத்தில் மலையிலிருந்து வந்த நீா் புகுந்தது. ஆசிரம பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்தது.
வீடுகள் மூழ்கும் அளவுக்கு வெள்ள நீா் சூழ்ந்தது. வீடுகளிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன. அடிஅண்ணாமலை காலனிக்குள் 2 வீடுகளில் தண்ணீா் புகுந்தது.
தகவல் அறிந்த வட்டாட்சியா் டி.வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) கே.எம்.பழனி மற்றும் வருவாய்த் துறையினா், அடிஅண்ணாமலை ஊராட்சி மன்றத் தலைவா் நவநீதம் ஆறுமுகம், துணைத் தலைவா் ராமஜெயம், வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வன், கிராம நிா்வாக அலுவலா் சு.வெங்கடேசன் ஆகியோா் சென்று சேத பகுதிகளை பாா்வையிட்டனா்.
குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் தண்ணீா் புகா வண்ணம் தற்காலிகமாக கால்வாய் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
மின்னல் தாக்கியதில் கொளக்கரவாடியில் முனியம்மாள் என்பவருக்குச் சொந்தமான மாடும், கனபாபுரத்தில் 2 மாடுகளும் உயிரிழந்தன. வீடு ஒன்றும் இடிந்து விழுந்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...