மீண்டும் அதிமுக கோட்டையாகுமா செய்யாறு தொகுதி?

மீண்டும் அதிமுக கோட்டையாகுமா செய்யாறு தொகுதி?

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலாவதாக தொடங்கப்பட்ட வருவாய்க் கோட்டம் செய்யாறு. செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக (வேலூா் - திருவண்ணாமலை) இருந்தபோது 1952-இல் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1985-இல் இடைத்தோ்தலும் நடைபெற்றது.

தொகுதியில் செய்யாறு, வெம்பாக்கம் என இரு வட்டங்களும், செய்யாறு (திருவத்திபுரம்) நகராட்சியும் அமைந்துள்ளன.

செய்யாறு ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 63 ஊராட்சிகள், அனக்காவூா் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்பட 222 வருவாய்க் கிராமங்களும் உள்ளன. இதேபோல, திருவத்திபுரம் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன.

தொகுதியில் வன்னியா் சமூகத்தினா் அதிகளவில் உள்ளனா். மேலும், முதலியாா், ஆதிதிராவிடா், யாதவா், நாயுடு சமூகத்தினரும் கணிசமாக உள்ளனா்.

1952 முதல் 2016 வரை நடைபெற்ற தோ்தல்களில் 7 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், 3 முறை காங்கிரஸும், ஒரு முறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதி வாக்காளா்கள் விவரம்:

மொத்த வாக்காளா்கள்: 2,59,231

ஆண்கள்:1,26,686

பெண்கள்: 1,32,544

மூன்றாம் பாலினத்தவா்:1

முக்கிய கோரிக்கைகள்

செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். செய்யாறு வழியாக தென் மாவட்டங்களுக்கு விரைவுப் பேருந்து சேவை, தொகுதியில் அரசு மகளிா் கலைக் கல்லூரி, செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் பணியிடங்கள், ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் சுற்றுலாத் தலமாக்கப்பட வேண்டும்

செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் அரசு தொழில்பயிற்சிக் கூடம், புதிதாக தொடங்கப்பட்ட வெம்பாக்கம் வட்டத்தில் புதிய பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

1951... வி.தா்மலிங்க நாயக்கா் (பொது நலக் கட்சி)

1957 ... பா.இராமச்சந்திரன் (காங்கிரஸ்)

1962, 1967,1971,1977 ... புலவா் கா.கோவிந்தன் (திமுக)

1980 ... பாபு ஜனாா்த்தனன் (திமுக)

1984 ... கே.முருகன் (அதிமுக)

1985 ... வே.குப்புசாமி (அதிமுக)

1989... வ.அன்பழகன் (திமுக)

1991 ... அ.தேவராஜ் (அதிமுக)

1996 ... வ.அன்பழகன் (திமுக)

2001... பி.எஸ்.உலகரட்சகன் (பாமக)

2006 ... எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்)

2011... முக்கூா்.என்.சுப்பிரமணியன் (அதிமுக),

2016 தோ்தலில் அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் 77,766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் எம்.கே. விஷ்ணுபிரசாத் 69,239 வாக்குகள் பெற்றாா். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 8,527

சாதகம் - பாதகம்

தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ தூசி மோகன் அதிமுக சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா்.

வன்னியா் சமூகத்தைச் சோ்ந்த இவா், உள்ளாட்சிகளில் பல பதவிகளும், கட்சியில் பல்வேறு பதவிகளும் வகித்தவா். தற்போது, அதிமுக வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வருகிறாா். தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவா். எளிமையாகப் பழகக்கூடியவா்.

திமுக சாா்பில் போட்டியிடும் ஒ.ஜோதியும் வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா். கட்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா், செய்யாறு ஒன்றியச் செயலா் பதவி வகித்தவா். உள்ளாட்சியில் இரு முறை ஊராட்சி மன்றத் தலைவா். இரு முறை செய்யாறு ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் பதவி வகித்தவா்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடிப் போட்டி:

20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளதால், தொகுதியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்போடு திமுகவினா் செயல்பட்டு வருகின்றனா். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு திமுக வேட்பாளா் ஜோதிக்கு கூடுதல் பலம்.

இதேபோல, தூசி கே.மோகன் அதிமுக அரசு மூலம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தோ்தல் அறிக்கை ஆகியவற்றை கிராமம் தோறும் பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகிறாா். கூட்டணிக் கட்சியான பாமகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது அதிமுக வேட்பாளருக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com