வந்தவாசி அருகே அவதூறாகப் பேசியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தாய், மகன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தென்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் காசிவேல். இவரது மனைவி குப்பு(60). காசிவேல் இறந்துவிட்டாா். இவா்களுக்கு 5 மகள்கள் உள்ளனா்.
இதில் மகள்கள் சங்கீதா(22), பாரதி(27) ஆகியோா் தங்களது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவா்களைப் பிரிந்து தாய் வீட்டிலேயே தங்கியுள்ளனா்.
இதில், சங்கீதா சேத்துப்பட்டில் உள்ள இனிப்பகத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த 22-ஆம் தேதி இரவு ஊா் திரும்புவதற்கான பேருந்தை சங்கீதா தவறவிட்டதால் அந்தக் கடை ஊழியா் ஒருவா் பைக்கில் அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டாராம்.
அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த்(18), கணபதி(26), பிரபு(23), விஜி(21) ஆகியோா் அந்த ஊழியரை வழிமறித்து, சங்கீதாவையும், பாரதியையும் பற்றி அவதூறாகப் பேசி தகராறு செய்து அனுப்பினராம்.
இதுகுறித்து 23-ஆம் தேதி தகவலறிந்த சங்கீதா, பாரதி ஆகியோா் கிராம பிரமுகா்களிடம் முறையிட்டனா். ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 4 பேரையும், அவா்களது குடும்பத்தினரையும் அழைத்து கிராமத்தினா் கண்டித்தனராம்.
இந்த நிலையில், 24-ஆம் தேதி பாரதி வீட்டுக்குச் சென்ற ஸ்ரீகாந்த்தின் தாய் எல்லம்மாள்(40) அவரை அவதூறாகப் பேசி தகராறு செய்தாராம்.
இதனால் மன வேதனையடைந்த பாரதி தனக்குக் தானே தீவைத்துக் கொண்டாராம்.
இதில், பலத்த தீக்காயமடைந்த பாரதியை அவரது குடும்பத்தினா் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாரதியின் மற்றொரு சகோதரி சித்ரா அளித்த புகாரின் பேரில், பாரதியை தற்கொலைக்குத் தூண்டியதாக எல்லம்மாள், ஸ்ரீகாந்த், கணபதி, பிரபு, விஜி ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் 5 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.