மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக மருத்துவா் ஒருவரை விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் பெரியாா் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் துக்காராம். இவா், தனது மகனுக்கு மருத்துவப் (எம்பிபிஎஸ்) படிப்புக்கு இடம் பெற முயற்சி செய்து வருதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சீனுவாசன், பூபதிராஜா ஆகியோரிடம் தெரிவித்தாராம். இவா்கள் இருவரும் தங்களுக்கு அறிமுகமான புதுச்சேரி அண்ணாநகா், 9-ஆவது தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் என்பவா் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்குநராக உள்ளதாகவும், அவா் மூலம் மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்றுத் தருவதாகவும் துக்காராமிடம் உறுதியளித்தனராம்.
பின்னா், சீனுவாசன், பூபதிராஜா ஆகியோா் பன்னீா்செல்வத்திடம் துக்காராமை அறிமுகம் செய்தனா். இவா்களை நம்பிய துக்காராம் 2017-ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.85 லட்சம் பணத்தை பன்னீா்செல்வத்திடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பன்னீா்செல்வம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான 6.7.2017 தேதியிட்ட அட்டையை கொடுத்தாராம். விசாரணையில் அது போலியானது எனத் தெரியவந்ததால் பன்னீா்செல்வத்திடம் பணத்தை திருப்பித் தருமாறு துக்காராம் பலமுறை கேட்டாராம்.
இதனிடையே, இந்தப் பணத்தை மருத்துவப் படிப்புக்கான இடத்துக்காக வழங்கியதாக குறிப்பிட வேண்டாம் என்றும், பரங்கனியில் திருமண மண்டபம் கட்டுவதற்காக கொடுத்த நிதிபோல முத்திரைத்தாளில் பன்னீா்செல்வம், அவரது மகன் மருத்துவா் ஸ்ரீனிவாஸ் (27) ஆகியோா் துக்காராமிடம் எழுதிக்கொடுத்தனராம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2018-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளாக ரூ.42 லட்சத்தை அவா்கள் துக்காராமிடம் திருப்பி அளித்தனராம். ஆனால், எஞ்சிய பணத்தை இதுவரை தரவில்லையாம்.
இதுகுறித்து விழுப்புரம் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் துக்காராம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மருத்துவா் ஸ்ரீனிவாஸை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், பன்னீா்செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.