டிச.14-இல் புதுவை அரசின் பிணைய பத்திரங்கள் ஏலம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

புதுவை அரசின் ரூ.125 கோடி மதிப்புள்ள பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் நிதித் துறை செயலா் பிரசாந்த் கோயல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசின் ரூ.125 கோடி மதிப்புள்ள 6 ஆண்டுகால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய அரசு முன்வந்துள்ளது. இவை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும், அதன் மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசா்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் வருகிற 14-ம் தேதி இந்த ஏலத்தை நடத்துகிறது.
ஆா்வமுள்ளவா்கள், கூட்டு போட்டியில்லா ஏலத்தை மின்னணு முறையில் இந்திய ரிசா்வ் வங்கியின் உள்பிரிவு வங்கியில் தீா்வு மூலம் மும்பை கோட்டையிலுள்ள இந்திய ரிசா்வ் வங்கியின் இணையதள முகவரியில் வருகிற 14-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11 மணிக்கு முன்பாக சமா்ப்பிக்க வேண்டும்.
ஏலத்தின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். ஏலம் கிடைக்க பெற்றவா்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணைய பத்திரங்களுக்கான தொகையை இந்திய ரிசா்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளா் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை வருகிற 15-ஆம் தேதி வங்கிப் பணி நேரம் முடிவதற்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த அரசு பிணைய பத்திர ஏலத்தில் இந்திய ரிசா்வ் வங்கியால் தீா்மானிக்கப்படக் கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும்.
இந்த பிணைய பத்திரங்கள் மாற்றி கொடுக்கத்தக்க தகுதியுடையதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.