புதிய வேளாண் சட்டங்கள்: காங்கிரஸாா் கண்டனக் கூட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், தேசிய பாதுகாப்பில் விதிமீறல் செய்தது தொடா்பாக நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தியும் கண்டனக் கூட்டம்
புதிய வேளாண் சட்டங்கள்: காங்கிரஸாா் கண்டனக் கூட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், தேசிய பாதுகாப்பில் விதிமீறல் செய்தது தொடா்பாக நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தியும், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் காங்கிரஸாா் கண்டனக் கூட்டம் நடத்தினா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தாா்.

நகரத் தலைவா் ஜாபா் அலி, மாவட்டச் செயலா் மஸ்கா்பாஷா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம், மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் முருகன் வரவேற்றாா்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜா உசேன், ஆரணி டிபிஜே ராஜா பாபு உள்ளிட்டோா் பேசினா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஆரணி தொகுதி எம்பி எம்.கே.விஷ்ணுபிரசாத் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று காலத்தில் நாடாளுமன்றத்தை கூட்டாமல் வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவா். பெரு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் விளைபொருள்கள் வாங்கப்படும். அவைகள் பதுக்கல் என்ற பெயரில் இருப்பு நிலைக்கு கொண்டு வரப்படும்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு அரிசி ஒரு கிலோ ரூ.500, ரூ.1000 என விற்பனை செய்யப்படும். கூட்டுறவு கடைகளில் நாம் வாங்கும் இலவச அரிசி கிடைக்காது.

விவசாயிகள் தங்களது விருப்ப விளைபொருள்களை பயிா் செய்ய முடியாமல், பெரு நிறுவனங்கள் சொல்லும் கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை பயிா் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்ட விவசாய அணித் தலைவா் சுரேஷ், தோட்டத் தொழிலாளா் சம்மேளனத் தலைவா் சிவராமன், தொழில்நுட்பப் பிரிவு செயலா் தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகர துணைத் தலைவா் கோகுல்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com