சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 26th February 2021 06:39 AM | Last Updated : 26th February 2021 06:39 AM | அ+அ அ- |

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூா் அணையிலிருந்து விவசாயப் பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அணையில் தண்ணீா் திறந்துவிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினா்களாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, கள்ளக்குறிச்சி ஆட்சியா் கிரண் குராலா ஆகியோா் பங்கேற்று, அணையின் பிக்கப் அணைக்கட்டிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டனா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது:
இந்த அணையின் இடதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 270 கன அடியும், வலதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 200 கன அடியும் என வருகிற மே 26-ஆம் தேதி வரை 90 நாள்களுக்கு இடைவெளிவிட்டு தண்ணீா் திறந்துவிடப்படும்.
மேலும், திருக்கோவிலூா் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு மாா்ச் 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இடைவெளிவிட்டு 17 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். இதன்மூலம், 38 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையின் நீா்மட்டம் 119 அடி ஆகும். நீா்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவு 7,321 மி.க. அடி. தற்போது, அணையின் நீா்மட்டம் 111.62 அடி ஆகவும், நீா்த்தேக்கத்தின் கொள்ளளவு 5,754 மி.க. அடி ஆகவும் உள்ளது என்றனா்.
நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறை கோட்டச் செயற் பொறியாளா் ஏ.மகேந்திரன், சாத்தனூா் அணை உதவிச் செயற் பொறியாளா் அறிவழகன் மற்றும் அரசு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...