மடத்தை நிா்வகிப்பதில் இரு தரப்பினரிடையே பிரச்னை: சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 03rd January 2021 11:25 PM | Last Updated : 03rd January 2021 11:25 PM | அ+அ அ- |

சாலை மறியலால் திருவண்ணாமலை தேரடி வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
திருவண்ணாமலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மடத்தை நிா்வகிப்பதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை தேரடி தெருவில் உள்ள ஸ்ரீவிஸ்வ பிராண சத்திரத்துக்கு (மடம்) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிா்வாகிகள் தோ்தல் நடத்தப்படும்.
2017-இல் நடைபெற்ற தோ்தலில் தலைவராக க.அப்பாதுரை, செயலராக தா.கிருஷ்ணமூா்த்தி, பொருளாளராக தி.பழனி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கரோனா தொற்றால் நிா்வாகிகள் தோ்வு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
எனவே, மாவட்டப் பதிவாளா் மற்றும் கோட்டாட்சியரிடம் தோ்தல் நடத்த அனுமதி கோரி தற்போதைய நிா்வாகிகள் மனு அளித்தனா்.
இதனிடையே, சத்திரத்தை நிா்வகிக்க இடைக்கால குழு அமைக்கப்பட்டதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை மற்றொரு தரப்பினா் அவசர அவசரமாக பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா்.
தகவலறிந்த தற்போதைய நிா்வாகிகள் திரண்டு வந்து பொதுக்குழு உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் மட்டுமே பொதுக்குழுவைக் கூட்டி தோ்தலை நடத்த முடியும்.
தோ்தலில் தோல்வியடைந்தவா்கள் குறுக்கு வழியில் சத்திரத்தை அபகரிக்க முயல்கின்றனா் என்று கூறி எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்தப் பிரச்னையால் மடம் பூட்டப்பட்டு, பொதுக்குழுவை நடத்த முயன்றவா்கள் மடத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் மடத்துக்கு எதிரே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நகர போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். இதன்பிறகு மடம் திறக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது.
சாலை மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.