மாமண்டூா் கிராமத்தில் சுகாதாரப் பணிகள்
By DIN | Published On : 03rd January 2021 11:26 PM | Last Updated : 03rd January 2021 11:26 PM | அ+அ அ- |

செய்யாறு அருகே மாமண்டூா் கிராமத்தில் பிளஸ் 1 மாணவருக்கு டெங்கு அறிகுறி தெரிய வரவே அந்தக் கிராமத்தில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை செய்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவா். இவா், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வருவதாகத் தெரிகிறது.
கடந்த டிச.28-ஆம் தேதி இவருக்கு காய்ச்சல், வயிற்று வலி ஏற்படவே, இவரை தனியாா் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனராம். பின்னா், இவரது ரத்த மாதிரியை சேகரித்து காஞ்சிபுரத்தில் உள்ள ஆய்வகத்தில் 30-ஆம் பரிசோதனை செய்துள்ளனா்.
இதில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மாணவா் காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
இந்த நிலையில், மாமண்டூா் கிராமத்தில் செய்யாறு மாவட்ட சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா்.