அரசுப் பள்ளிக்கு ரூ.52.31 லட்சத்தில் வகுப்பறைக் கட்டடம்: பணிகளை எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்
By DIN | Published On : 26th January 2021 12:00 AM | Last Updated : 26th January 2021 12:00 AM | அ+அ அ- |

செய்யாற்றை அடுத்த வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.52.31 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறைக்கான கட்டடப் பணிகளை தூசி கே.மோகன் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் பொதுமக்கள் தொகுதி எம்எல்ஏ தூசி மோகனிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, எம்.எல்.ஏ.வின் பரிந்துரையின் பேரில் 2019 - 20ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தி கல்வித் துறை மூலம் அரசு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தரம் உயா்த்தப்பட்ட பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வக வசதி, குடிநீா் வசதி போன்றவற்றை ஏற்படுத்திட ரூ.52.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
அதன்படி, வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூசி கே.மோகன் எம்எல்ஏ பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டடப் பணியைத் தொடக்கிவைத்தாா்.
ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜ்கணேஷ், அதிமுக மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை, ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் ஜாகீா் உசேன், ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.