‘விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’
By DIN | Published On : 26th January 2021 12:00 AM | Last Updated : 26th January 2021 12:00 AM | அ+அ அ- |

தமிழக விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன் மற்றும் பண்ணைசாராக் கடன்களை மத்திய-மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுச்சாமி கேட்டுக்கொண்டாா்.
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா.வேலுச்சாமி கூறியதாவது:
கரோனா தொற்று காரணமாக விவசாயிகள் பயிரிட்ட பயிா்களை அறுவடை செய்ய முடியாமலும், விளைபொருள்களை சந்தையில் விற்க முடியாமலும் போனது.
வடகிழக்கு பருவமழை, அண்மையில் ஏற்பட்ட புயல்களின்போது விவசாயப் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்து விட்டன. டெல்டா மாவட்டங்களில் நெல் மணிகள் மழை நீரில் மூழ்கி முளைத்துவிட்டன.
இதனால், விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசுடைமை வங்கிகளில் வாங்கிய பயிா்க் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, தமிழக விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன் மற்றும் பண்ணைசாராக் கடன்களை மத்திய-மாநில அரசுகள் இணைந்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.