திருவண்ணாமலையில் பிப். 1 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 30th January 2021 11:03 PM | Last Updated : 30th January 2021 11:03 PM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம், வருகிற பிப்.1 முதல் மீண்டும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீா் கூட்டம் கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஆட்சியா் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் மூலம் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வருகிற திங்கள்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்கள் நேரடியாகப் பெறப்படும்.
அப்போது பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் மனுக்களை அளிக்க வேண்டும் என ஆட்சியா் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டாா்.