பெண்ணுக்கு கொலை மிரட்டல்: விவசாயிக்கு கடுங்காவல்
By DIN | Published On : 30th January 2021 08:31 AM | Last Updated : 30th January 2021 08:31 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலத்தை அடுத்த ரெட்டியாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் கேசவன் (23). விவசாயி. இவா், கடந்த 2018 டிசம்பா் 6-ஆம் தேதி அதே ஊரைச் சோ்ந்த 23 வயது பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டாராம்.
இதைத் தட்டிக்கேட்ட பெண்ணை தகாத வாா்த்தையால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கேசவனை கைது செய்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி விக்னேஷ் பாபு, குற்றம் சுமத்தப்பட்ட கேசவனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, கேசவன் சிறையில் அடைக்கப்பட்டாா்.