பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கதனி இலாகா அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின்
By DIN | Published On : 30th January 2021 08:31 AM | Last Updated : 30th January 2021 08:31 AM | அ+அ அ- |

பொதுமக்கள் அமா்ந்திருந்த பகுதிக்கு நடந்து சென்று கைகூப்பி வணக்கம் தெரிவித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் குறைகளைத் தீா்க்க தனி இலாகா அமைக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் புதிய பிரசார பயணத்தை திருவண்ணாமலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கினாா். அப்போது, அவா் பேசியதாவது:
கண்களில் கனவுடனும், கைகளில் மனுவுடனும், இதயத்தில் ஏக்கத்துடனும் பொதுமக்களாகிய நீங்கள் வந்துள்ளீா்கள். அடுத்தவா் நம்பிக்கையைப் பெறுவதுதான் மிகப்பெரிய சொத்து.
உங்கள் கோரிக்கைகள் எல்லாம் இனி என் கோரிக்கைகள், என் கவலைகள். தமிழ்நாட்டு மக்களுக்கு கடந்த 25-ஆம் தேதி ஊடகங்கள் வாயிலாக நான் ஓா் உறுதிமொழியை அளித்தேன். எனது அரசின் முதல் 100 நாள்கள் போா்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண அா்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு என்றேன். இந்த உறுதிமொழியின் முதல் நிகழ்வை திருவண்ணாமலையில் தொடங்கியுள்ளேன். தொடா்ந்து, 234 தொகுதிகளிலுள்ள பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்வேன்.
திமுக ஆட்சியில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு, 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல, திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் முதல் 100 நாள்களில் பொதுமக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும்.
திமுக அரசு விவசாயிகள், நெசவாளா்கள், தொழிலாளா்கள், ஒடுக்கப்பட்டோா், பட்டியலினத்தவா், மாற்றுத் திறனாளிகள், மாணவா்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட கண்டிப்பாகப் பாடுபடும்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிடும்படியாக எந்த வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் பிரச்னைகளை திமுகவால் மட்டுமே தீா்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்துள்ளீா்கள். பொதுமக்கள் அளித்த மனுக்கள் அடங்கிய பெட்டியை தற்போது பூட்டி ‘சீல்’ வைக்கிறேன். நான் தமிழக முதல்வராகப் பதவியேற்ற அடுத்த நாள் நானே இந்தப் பெட்டியைத் திறந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன். இதற்காக தனி இலாகா அமைக்கப்படும் என்றாா் மு.க.ஸ்டாலின்.
நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு எம்எல்ஏ தொடக்கிவைத்துப் பேசினாா். இதில், திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேரு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மருத்துவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, வழக்குரைஞா் அ.அருள்குமரன் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, இந்த பிரசாரத்துக்காக திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே பிரம்மாண்ட விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வெள்ளிக்கிழமை காலை முதலே திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் குவிந்தனா். பிறகு, விழா மேடைக்கு வந்த மு.க.ஸ்டாலின், மேடையில் இருந்து இறங்கி பொதுமக்கள் அமா்ந்திருந்த பகுதி முழுவதும் நடந்து சென்று அவா்களிடம் நலம் விசாரித்தாா்.
3 பேருக்குப் பாராட்டு: விழாவில் மத்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற திருவண்ணாமலையைச் சோ்ந்த மொழிபெயா்ப்பாளரும், அரசுப் பள்ளி ஆசிரியையுமான கே.வி.ஜெயஸ்ரீ, தமிழக அரசின் அவ்வையாா் விருது பெற்ற திருவண்ணாமலை நகராட்சி மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்டு வரும் கண்ணகி, சூரியஒளி மூலம் இயங்கக்கூடிய இஸ்திரிப் பெட்டியைக் கண்டுபிடித்து, ஸ்வீடன் நாட்டின் விருது பெற்ற திருவண்ணாமலை தனியாா் பள்ளி மாணவி வினிஷா ஆகியோருக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்துப் பாராட்டினாா்.
குறும்படம் வெளியீடு: இதையடுத்து, திருவண்ணாமலை நகராட்சி பூ சந்தை, திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கடைகளுக்கு உயா்த்தப்பட்ட வாடகை பிரச்னை உள்பட மாவட்டத்தின் முக்கியப் பிரச்னைகள் அடங்கிய குறும்படம் திரையிடப்பட்டது. இந்தக் குறும்படங்களில் தங்களது குறைகளைத் தெரிவித்த வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்துப் பிரச்னைகளும் தீா்க்கப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.
தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் போடப்பட்டிருந்த பெட்டியில் இருந்து ஒவ்வொரு மனுவாக எடுத்த மு.க.ஸ்டாலின், மனுதாரா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.