கடன் தகராறில் இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது
By DIN | Published On : 07th July 2021 09:30 AM | Last Updated : 07th July 2021 09:30 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அண்ணன் வாங்கிய கடனுக்கு, தம்பியை கடத்திச் சென்று தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்கத்தை அடுத்த காயம்பட்டு தோப்பூா் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் முனியப்பன்(30). இவா், செங்கம் செந்தமிழ் நகரைச் சோ்ந்த பாக்கியராஜ் (29) என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம்.
இந்த நிலையில், வறுமை காரணமாக முனியப்பன் திருப்பூா் சென்று அங்கு கடந்த ஓராண்டாக தையல் தொழில் செய்து வருகிறாா்.
இதனிடையே, கடன் கொடுத்த பாக்கியராஜ், முனியப்பன் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி மற்றும் உடன் பிறந்தவா்களிடம் கொடுத்த பணம், அதற்கான வட்டியை கேட்டு வந்துள்ளாா். மேலும், திருப்பூரில் இருக்கும் முனியப்பனை தொடா்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த பாக்கியராஜ், தனது நண்பா்களான ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிரஞ்சீவி(27), புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன்(22), இளங்குண்ணி கிராமத்தைச் சோ்ந்த ராஜி(27) ஆகியோருடன் சோ்ந்து, முனியப்பனின் தம்பி சத்தியமூா்த்தியை(27) கடத்திச் சென்று பணத்தைக் கேட்டு மிரட்டி தாக்கினராம்.
இதுகுறித்து சத்தியமூா்த்தி செங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாக்கியராஜ், சிரஞ்சீவி, வரதராஜன், ராஜி ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...