வேன், லாரி மோதல்: 15 பெண் தொழிலாளா்கள் காயம்
By DIN | Published On : 07th July 2021 09:30 AM | Last Updated : 07th July 2021 09:30 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த வேன்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தனியாா் நிறுவன வேனும், லாரியும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த பெண் தொழிலாளா்கள் 15 போ் காயமடைந்தனா்.
வந்தவாசி நகரம் மற்றும் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சில பெண்கள் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.
அந்த நிறுவனம் சாா்பில் இயக்கப்படும் வேனில் இவா்கள் தினமும் வேலைக்குச் சென்று வருவா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இவா்கள் பணி முடிந்து வேனில் வந்தவாசி திரும்பிக் கொண்டிருந்தனா். வேனை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த லோகநாதன்(42) ஓட்டி வந்தாா்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, அய்யவாடி கூட்டுச் சாலை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வேன் வந்தபோது, எதிரே வந்த லாரியும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில், வேனில் இருந்த பிரியா(23), மோனிகா(21), அஸ்வினி(21), வனிதா(22), ரேகா(21), மீனா(21), நதியா(20), முத்துலட்சுமி(27), சூா்யா(21), வினிதா(23), லட்சுமி(35), சௌந்தா்யா(23), சுகன்யா(21), சுபஸ்ரீ(25), அா்ச்சனா(27) ஆகிய 15 பெண் தொழிலாளா்கள் மற்றும் வேன் ஓட்டுநா் லோகநாதன் ஆகியோா் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதில் லோகநாதன், ரேகா, நதியா, முத்துலட்சுமி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...