வேட்டவலம் அருகே உயா்மின் கோபுரங்கள் அமைக்க உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் தொடா்ந்து 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேட்டவலத்தை அடுத்த கெங்குப்பட்டு, நாடழகானந்தல், கோணலூா் கிராமங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி நடைபெறும் நிலங்களின் உரிமையாளா்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லையாம். இந்த நிலையில், ஜூலை 22-ஆம் தேதி கோணலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயா்மின் கோபுரத்தில் மின் கம்பிகள் இணைக்கும் பணி நடைபெற்றது.
பணியை தடுத்து நிறுத்திய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிவிட்டு பணி செய்யுங்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோணலூா் கிராம மாரியம்மன் கோயிலில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.
தொடா்ந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டம் 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.