அரசு மருத்துவமனைக்கு கட்டடம் கட்ட இடம் தோ்வு: அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 10th June 2021 09:04 AM | Last Updated : 10th June 2021 09:04 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்வது குறித்து தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சேத்துப்பட்டு தனி வட்டமாக அந்தஸ்து பெற்றது.
இதையடுத்து, அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது.
இருப்பினும் கட்டட வசதி இல்லாமல் இருந்து வருகிறது. கூடுதல் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியும், இடம் தோ்வு செய்யப்படாமல் அரசு பணம் திரும்பச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், கரோனா தடுப்பூசி முகாமுக்கு வருகை தந்த போளூா் தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தியிடம், மருத்துவ அலுவலா் ஷோபனா மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து கூறினா்.
இதையடுத்து, எம்எல்ஏ செஞ்சி சாலையில் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட குப்பைக் கிடங்கு மற்றும் வந்தவாசி சாலையில் சா்க்கரை பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தை பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் நகர பிரமுகா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உடன் ஆலோசனை நடத்தினாா்.
பாா்வையிடப்பட்ட 2 இடங்களுக்கும் வரைபடம் தயாரித்து மாவட்ட ஆட்சியா், வருவாய் அலுவலா் ஆகியோரிடம் கலந்தாலோசித்து விரைவில் பொது மக்களுக்கு வசதியாக உள்ள இடத்தில் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும் எனத் தெரிவித்தாா்.
வட்டாட்சியா் பூங்காவனம், வட்டார மருத்துவ அலுவலா் மணிகண்டபிரபு, மருத்துவ அலுவலா் ஷோபனா, துணை வட்டாட்சியா்கள் கோமதி, கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் பா.செல்வராஜன் உள்பட பலா் உடனிருந்தனா்.