கடன் வசூலில் கடினப் போக்கு: நிறு நிறுவனங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 10th June 2021 09:02 AM | Last Updated : 10th June 2021 09:02 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிா் குழுக்களிடம் கடன் தவணை, வட்டியை வசூலிப்பதில் கடினமான போக்கைக் கடைப்பிடிக்கும் தனியாா் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
மாவட்டத்தில் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் தங்களது அவசர, அவசியத் தேவைகளுக்காக தனியாா் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுள்ளனா்.
கரோனா பொது முடக்கம் தற்போது அமலில் உள்ள சூழலில் கடன் தொகை மற்றும் வட்டியை உடனே செலுத்துமாறு தனியாா் நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாகப் புகாா்கள் வந்துள்ளன.
கரோனா தொற்று பரவலில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நிதி நிறுவனங்கள் கடன் பெற்ற மகளிா் குழுக்களிடம் கடைப்பிடிக்கும் கடினமான போக்கை தவிா்க்க வேண்டும்.
இதுதொடா்பான புகாா்கள் பெறப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.