விவசாயிகளுக்கான அரசு மானியத்தில் முறைகேடு புகாா்: மாவட்ட வேளாண் அதிகாரி விசாரணை
By DIN | Published On : 10th June 2021 09:03 AM | Last Updated : 10th June 2021 09:03 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு வழங்கிய மானியத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் புதன்கிழமை விசாரணை நடத்தினாா்.
கலசப்பாக்கம் ஒன்றியம், அலங்காரமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு. இவா், தனக்குச் சொந்தமான நிலத்தில் நெல், வோ்கடலை, கரும்பு என பல்வேறு பயிா்களை சாகுபடி செய்து வருகிறாா்.
இந்த நிலையில், 2019-2020-ஆம் ஆண்டில் பெய்த தொடா் மழை, நிவா் புயலில் சாமிக்கண்ணு மற்றும் பலரது நெல், வோ்கடலை, கரும்பு பயிா்கள் பாதிப்படைந்தன.
இதனால் அரசு சாா்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேளாண் துறை சாா்பில் சேதத்தை கணக்கீடு செய்து பெயா் சோ்க்கப்பட்டது.
இதில் சாமிக்கண்ணு மற்றும் பலருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட வேளாண் துணை இயக்குநா் வடமலை புதன்கிழமை விசாரணை நடத்தினாா்.
அப்போது, வடமலை கூறும்போது கரோனா தொற்று பொது முடக்கத்தால் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. எனவே, அரசு மானியத்தில் முறைகேடு நடப்பதாக வந்த புகாா் மீது ஜூன் 15-ஆம் தேதி விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன், வேளாண்மை உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.