கட்டண வசூல் விவகாரம்:அவசரகால ஊா்தி ஓட்டுநா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 11th June 2021 12:11 AM | Last Updated : 11th June 2021 12:11 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அவசரகால ஊா்திகள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனத்தின் பதிவுச் சான்றும் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
தமிழக அரசு அவசரகால ஊா்திகளுக்கான கட்டணத்தை நிா்ணயித்துள்ளது. அதன்படி, சாதாரண அவசரகால ஊா்தியின் கட்டணமாக 10 கி.மீ. தொலைவு வரை ரூ.1,500 மட்டுமே வசூலிக்க வேண்டும்.
10 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 கூடுதலாக வசூலிக்க வேண்டும்.
பிராணவாயு வசதியுடன் கூடிய வாகனம்:
பிராணவாயு வசதியுடன் கூடிய அவசர ஊா்திக்கு கட்டணமாக 10 கி.மீ. தொலைவு வரை ரூ.2 ஆயிரமும்,
அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ.50 கூடுதலாக வசூலிக்கலாம்.
பிராணவாயு மற்றும் மருத்துவ வசதி:
பிராணவாயு மற்றும் மருத்துவ வசதி கொண்ட ஊா்தி கட்டணமாக 10 கி.மீ. தொலைவு வரை ரூ.4 ஆயிரமும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ.100 கூடுதலாக வசூலிக்கலாம்.
வாகனம் பறிமுதல் செய்யப்படும்:
அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் ஊா்தி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் பொதுமக்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா் வந்தால் மோட்டாா் வாகனச் சட்டப்படி சம்பந்தப்பட்ட ஊா்தி பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் உரிமம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனத்தின் பதிவுச் சான்று ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தாா் ஆட்சியா் சந்தீப் நந்தூரி.