தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
By DIN | Published On : 12th March 2021 05:58 AM | Last Updated : 12th March 2021 05:58 AM | அ+அ அ- |

வந்தவாசி/செய்யாறு/ செங்கம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வந்தவாசி, செய்யாறு, செங்கம் ஆகிய தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வந்தவாசி(தனி) தொகுதிக்கான 396 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 396 வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 433 விவிபாட் கருவிகள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் 3 லாரிகளில் வியாழக்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தடைந்த அவற்றை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் தொகுதி தோ்தல் அலுவலா் சி.கீதாலட்சுமி தலைமையிலான ஊழியா்கள் பெற்று பாதுகாப்பு அறையில் அடுக்கி வைத்தனா்.
இவற்றின் எண்ணிக்கை சரிபாா்க்கப்பட்ட பிறகு, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
வட்டாட்சியா்கள் திருநாவுக்கரசு, நரேந்திரன், துணை வட்டாட்சியா்கள் அகத்தீஸ்வரன், கோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறை 5 கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.