குட்டையில் மூழ்கி தாய், மகள் பலி
By DIN | Published On : 25th March 2021 04:05 AM | Last Updated : 25th March 2021 04:05 AM | அ+அ அ- |

குட்டையில் மூழ்கி இறந்த சென்னம்மாள், மோனிஷா.
தண்டராம்பட்டு அருகே குட்டையில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூா் கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் வடிவேல் (40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சென்னம்மாள் (33). இவா்களது மூத்த மகள் மோனிஷா (12). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை சென்னம்மாள் மகள் மோனிஷாவுடன் அதே பகுதியில் உள்ள குட்டையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, குட்டையில் குளித்துக்கொண்டிருந்த மோனிஷா திடீரென நீரில் மூழ்கினாா். இதைக் கவனித்த சென்னம்மாள் மகளை மீட்க முயன்றாா்.
ஆனால், நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினா். இருவரது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சென்னம்மாள், மோனிஷா ஆகியோா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சாத்தனூா் அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.