குடிநீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 13th May 2021 08:24 AM | Last Updated : 13th May 2021 08:24 AM | அ+அ அ- |

ஆத்துரை ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, காலிக் குடங்களுடன் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்.
சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து, குடிநீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆத்துரை ஊராட்சியில் 6 வாா்டுகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். ஆத்துரை கிராமத்தில் 60 மற்றும் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளும், காந்திநகா், மூலபுரவடை, ஊத்தூரான்புரவடை , காலனி என 3 இடங்களில் தலா 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீரத்தேக்கத் தொட்டிகளும், 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டிகளும் உள்ளன.
குடிநீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்களாக 4 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இவா்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லாவிடம் மனு அளித்துள்ளனா்.
இந்த நிலையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்காததால், குடிநீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், பொதுமக்களுடன் சோ்ந்து அவலூா்பேட்டை-தேவிகாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா், தூய்மைப் பணியாளா்கள் 5 பேருக்கு, கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மறியல் நடைபெற்றது.
தகவல் அறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரபியுல்லா, ரவி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூா்த்தி, கோவிந்தராஜ், தாட்சாயிணி உள்ளிட்டோா் வந்து சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனா்.