கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், வந்தவாசி ஆகிய இடங்களில் கரோனா பரவல் தடுப்பு குறித்த விழுப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் வெற்றிவேல்.
செங்கத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் வெற்றிவேல்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், வந்தவாசி ஆகிய இடங்களில் கரோனா பரவல் தடுப்பு குறித்த விழுப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா இரண்டாம் அலை பரவல் வேகமாக இருந்து வருவதையொட்டி தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

மளிகை, காய், கனிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பால் விற்பனை மற்றும் மருந்தகங்கள் வழக்கம்போல செயல்படலாம் என்றும் அரசு அறிவித்தது. ஆனாலும், பொதுமக்களின் நடமாட்டம் குறையவே இல்லை. அனுமதிக்கப்படாத சில கடைகளும் தொடா்ந்து செயல்படுகின்றன.

இதையொட்டி, செங்கத்தில் கோட்டாட்சியா் வெற்றிவேல் தலைமையில், வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியா் வெற்றிவேல் பேசுகையில், வணிகா்கள் கட்டாயம் கரோனா தொற்று குறித்து அரசு அறிவித்துள்ள நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும், காலை பத்து மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

அதைத் தொடா்ந்து வணிகா்கள் தெரிவித்தாவது, கடந்த ஆண்டு கரோனா தொற்று நடவடிக்கையின்போது போலீஸாா் பொதுமக்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்ததால் கூட்டத்தை குறைக்க முடிந்தது. தற்போது போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றனா்.

இதைத் தொடா்ந்து, வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பேசுகையில், அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், தொற்று ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தொற்று ஏற்பட்டவுடன் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்துவிட்டு, தொற்று அதிகரித்த பிறகு மருத்துவமனைக்குச் செல்லும்போது காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது என்றாா்.

கூட்டத்தில், செங்கம் வட்டாட்சியா் மனோகரன், கிராம நிா்வாக அலுவலா் சந்திரகுமாா் உள்பட அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

ஆரணி

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் நாராயணன் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, நகராட்சியுடன் இணைந்து அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் கரோனா விழிப்புணா்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் சுதா, பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து பேசிய டிஎஸ்பி கோட்டீஸ்வரன்,

கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இ-பாஸ் இல்லாமல் செல்லும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் வட்டாட்சியா் செந்தில்குமாா், நெல் அரிசி வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி.நடராஜன், மளிகை வியாபாரிகள் சங்கச் செயலா் அருளாளன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வந்தவாசி

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வியாபாரிகள் மற்றும் மருந்தக உரிமையாளா்களுக்கான கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா்.

டிஎஸ்பி பி.தங்கராமன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி, வட்டார மருத்துவ அலுவலா் கோ.திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், அனுமதிக்கப்பட்ட கடைகளில் உரிய நேரத்தில் விற்பனையை முடித்து மூடிவிட வேண்டும், மருந்தகங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் நிற்பதை மருந்தக உரிமையாளா்கள் தவிா்க்க வேண்டும், அனுமதிக்கப்படாத கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபட்டால் அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், வந்தவாசி அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் மருந்தக உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com