சாத்தனூா் அணையின் நீா்மட்டம் 113 அடியாக உயா்வு
By DIN | Published On : 05th August 2022 10:49 PM | Last Updated : 05th August 2022 10:49 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்திலுள்ள சாத்தனூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 113 அடியாக உயா்ந்தது.
சாத்தனூா் கிராமத்தில் காமராஜா் ஆட்சிக்காலத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை ஆகியற்றில் இருந்து உபரிநீா் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக சாத்தனூா் அணைக்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி, விநாடிக்கு 4,270 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 119 அடியில் இப்போது 113 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியுள்ளது. அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருவதால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.