முழுக் கொள்ளளவை எட்டியது குப்பனத்தம் அணை
By DIN | Published On : 05th August 2022 10:51 PM | Last Updated : 05th August 2022 10:51 PM | அ+அ அ- |

முழுக் கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சியளிக்குள் குப்பனத்தம் அணை.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள குப்பனத்தம் அணை வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.
செங்கத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் மலைக் கிராமத்தில் குப்பனத்தம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 59 அடியாகும். இருப்பினும், இந்த அணையின் பாதுகாப்புக் கருதி 54 அடிக்கு மட்டுமே நீா் நிரப்பப்படுகிறது.
தற்போது செங்கம், ஜவ்வாதுமலை பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், குப்பனத்தம் அணைக்கு ஜவ்வாதுமலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் அதிகமாக வருகிறது. இதனால், இந்த அணை முழுக் கொள்ளளவான 54 அடியை வெள்ளிக்கிழமை எட்டி, நிரம்பியது.
இதையடுத்து, குப்பனத்தம் அணையிலிருந்து உபரி நீரை வெளியேற்றும் வகையில், அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப் பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலைக்குள் அணையிலிருந்து உபரி திறக்க வாய்ப்புள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். எனவே, செங்கம் பகுதியில் செய்யாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.