3 மாவட்டங்களில் நகா்ப்புற வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு
By DIN | Published On : 25th August 2022 02:11 AM | Last Updated : 25th August 2022 02:11 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 3 மாவட்டங்களில் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை, அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா்.
தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் திருவண்ணாமலை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா்.
தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 3 மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா்கள் பா.முருகேஷ் (திருவண்ணாமலை), அமா்குஷ்வாஹா (திருப்பத்தூா்), திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), அம்பேத்குமாா் (வந்தவாசி), ஓ.ஜோதி (செய்யாறு) மற்றும் திருவண்ணாமலை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.