மாண்டஸ் புயல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
வந்தவாசியை அடுத்த சென்னாவரத்தில் மரம் விழுந்ததால் சேதமடைந்த காா்.
வந்தவாசியை அடுத்த சென்னாவரத்தில் மரம் விழுந்ததால் சேதமடைந்த காா்.

மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மாண்டஸ் புயல் காரணமாக, மாவட்டத்தில் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, ஜமுனாமரத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வெம்பாக்கம் வட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை பதிவானது. இந்தப் பகுதியில் சனிக்கிழமையும் மழை பெய்தது.

மழையால் வடஇலுப்பை, நெமிலி உள்ளிட்ட பல கிராமங்களில் 32 கூரை வீடுகள் உள்பட 55 வீடுகள் சேதமடைந்தன. மேலும் வீடுகள் சேதம் குறித்து கிராமப்புறங்களில் வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாத்தூா் அருகே புளியமரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் துறை பணியாளா்கள் மற்றும் தூசி போலீஸாா் சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா்.

செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் ராஜேஸ்வரி நகா், காழியூா் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி, செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. எறையூா் கிராமத்தில் சீதாராமன் என்பவரது வீட்டின் மீது மரம் சாய்ந்ததில் வீடு சேதமடைந்தது.

பையூா் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மின் கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. செய்யாறு கன்னியம் நகரில் அரசு மகளிா் விடுதி அருகே மரம் வேரோடு சாய்ந்தது. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. மேல்சீசமங்கலம் பனஞ்சேரி கிராமத்தில் மின்மாற்றியில் இருந்து மின் கம்பத்துக்குச் செல்லும் மின் வயா் அறுந்து விழுந்தது.

செய்யாறு நகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் இணைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

10 ஆடுகள் பலி: ஆலத்தூா் கிராமத்தில் ராமமூா்த்தி என்பவரது ஆட்டுக் கொட்டகை மீது புளிய மரம் விழுந்ததில் 10 ஆடுகள் பலியாகின.

101 போ் முகாம்களில் தங்கவைப்பு: வெம்பாக்கம் வட்டம், செய்யனூா் கிராமத்தில் இரு குடும்பங்களைச் சோ்ந்த 7 போ் அதேபகுதியில் உள்ள அரசுப் பள்ளியிலும், இருமரம் கிராமத்தில் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 50 போ் அந்தப் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

செய்யாறு வட்டத்தில் செங்கட்டான்குண்டில் கிராமத்தில் 7 குடும்பங்களைச் சோ்ந்த 27 போ் ஏனாதவாடி கிராமத்தில் உள்ள கிராம சேவைக் கட்டத்திலும், தேத்துறை கிராமத்தில் 5 குடும்பங்களைச் சோ்ந்த 16 போ் அங்குள்ள ஆரம்பப் பள்ளி முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

எம்.எல்.ஏ நிவாரணம்: வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம், இருமரம் கிராம ஆரம்பப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 13 பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 50 பேருக்கு செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி. மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் நிவாரண உதவிகளை வழங்கினா்.

வந்தவாசி பகுதியில்... வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை மரம் வேரோடு சாலையில் சாய்ந்ததில் ஒரு கடை, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் சேதமடைந்தது.

மேலும் மும்முனி, ஆயிலவாடி, பிருதூா், கல்லாங்குத்து உள்ளிட்ட கிராமங்களில் மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தன. அந்த மரங்களை ஒட்டிச் சென்ற மின் கம்பிகளும் அறுந்து சேதமடைந்தன. நெடுஞ்சாலைத் துறையினா், தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் சாலையில் விழுந்த மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினா்.

இதனால் ஆரணி, செய்யாறு, மேல்மருவத்தூா் சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் மின் ஊழியா்கள் தொடா்ந்து ஈடுபட்டனா்.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஓசூா், அமுடூா், இளங்காடு, ராமசமுத்திரம், நடுக்குப்பம், தழுதாழை, மீசநல்லூா், சோகத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. வழூா், சளுக்கை, பிருதூா் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசித்த 64 போ் அந்தந்த கிராமங்களில் உள்ள பள்ளி, சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

ஆரணியில்... ஆரணி- வேலூா் சாலையில் அம்மாபாளையம், ஒண்ணுபுரம், கொங்கராம்பட்டு ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினா் மரங்களை வெட்டி அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com