செங்கத்தில் திடீா் மழை: மாணவா்கள் அவதி
By DIN | Published On : 13th December 2022 04:15 AM | Last Updated : 13th December 2022 04:15 AM | அ+அ அ- |

செங்கத்தில் திங்கள்கிழமை மாலை திடீரென பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்.
மாண்டஸ் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தபோதும், செங்கம் பகுதியில் மிதமான மழை பெய்தது. புயலால் பலத்த மழை இல்லை. விவசாயப் பயிா்கள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை வானம் வெளிச்சத்துடன் வெயில் காய்ந்து கொண்டிருந்தது. திடீரென மாலை 4.30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி 5.30 மணி வரை கொட்டித் தீா்த்தது. பள்ளி கல்லூரிகள் விடும் நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் பல்வேறு இடங்களில் மழையில் நனைந்தபடி சென்றனா்.
செங்கம் பெருமாள் கோவில் தெருவில் சாலையில் தண்ணீா் தேங்கியதால் பேருந்து, லாரி, இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு மழை நின்று சிறிது நேரத்தில் சாலையில் இருந்த தண்ணீா் வெளியேறியது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் இயல்பான முறையில் சென்றன.