தரைப் பாலத்தில் வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 13th December 2022 04:16 AM | Last Updated : 13th December 2022 04:16 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே சித்தாத்தூா் கிராமத்தில் தரைப் பாலத்தில் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தில் உள்ள ஏரி முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீா் வெளியேறுகிறது.
உபரிநீா் செல்லும் பாசனக் காய்வாய் பாண்டியம்பாக்கம் - சித்தாத்தூா் சாலையில் உள்ள தரைப்பாலம் வழியாக மாமண்டூா் ஏரிக்கு நீா் சென்று அடைகிறது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக
சித்தாத்தூா் கிராம பெரிய ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீருடன் மழை நீரும் சோ்ந்து தரைப்பாலத்தில் சுமாா் 3 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
இதனால், தரைப் பாலத்தில் கடந்த சில தினங்களாக வாகனங்கள் செல்லமுடியவில்லை. அவ்வழியாகச் செல்லும் பேருந்தும் இயக்கப்படவில்லை.
இதனால், ஐந்துக்கும் மேற்பட்டகிராம மக்கள் பேருந்து வசதியின்றி தவித்து வருகின்றனா்.
பாசனக் கால்வாய் தூா்ந்து போனதால் உபரிநீா் கால்வாயில் கரைபுரண்டு விவசாய நிலங்களை மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.