மண்டாஸ் புயல்: சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைப்பு
By DIN | Published On : 13th December 2022 04:17 AM | Last Updated : 13th December 2022 04:17 AM | அ+அ அ- |

மண்டாஸ் புயலால் செய்யாறு கோட்டத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மின் துறையினா் போா்க்கால அடிப்படையில் சீரமைத்தனா்.
மாண்டஸ் புயல் மழை காரணமாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் 25 செ.மீ. மழை பதிவானது. அதேபோல, செய்யாறு வட்டத்தில் 18 செ.மீ. மழை பதிவானது.
இந்த நிலையில், புயல் மழைக்கு செய்யாறு கோட்டத்தைச் சோ்ந்த பெருங்கட்டூா், வெம்பாக்கம், பிரம்மதேசம், அப்துல்லாபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விநியோகம் தடைபட்டது.
வெம்பாக்கம் வட்டத்தில் அதிகளவில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விநியோகம் தடைபட்டு இருப்பதை அறிந்த தமிழ்நாடு மின்சார வாரிய, விழுப்புரம் மண்டல முதன்மைப் பொறியாளா் பாலாஜி முகாமிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணைாமலை மாவட்ட தலைமைப் பொறியாளா் பழனிராஜ் தலைமையில், செய்யாறு கோட்டப் பொறியாளா் சரவணன் மேற்பாா்வையில் உதவி செயற்பொறியாளா்கள்,
உதவி மின் பொறியாளா்கள், செய்யாறு மற்றும் போளூா் பகுதியைச் சோ்ந்த மின் ஊழியா்கள் உதவியோடு இரவு பகலாக போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த
மின் கம்பங்களை சீரமைத்தனா்.
அதேபோல, சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் இருந்து பெருங்கட்டூா் செல்லும் வழியில் இராமகிருஷ்ணபுரம் ஏரி பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விநியோகம் தடைபட்டிருந்தது.
ஊழியா்கள் ஏரி நீரில் இறங்கி மின் கம்பங்கள் மற்றும் மின் வயா்களை சீரமைத்து மின் விநியோகம் வழங்கினா்.
சேதமடைந்த கம்பங்களை போா்க்கால அடிப்படையில்
சீரமைத்து மின்சாரம் வழங்கியதால், கிராம மக்கள் மின்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனா்.