அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 22nd December 2022 02:36 AM | Last Updated : 22nd December 2022 02:36 AM | அ+அ அ- |

அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்திக்கு புதன்கிழமை நடைபெற்ற மகா தீபாராதனை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தப் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையடுத்து, தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.