செங்கம் நகரில் நூலகம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 22nd December 2022 02:38 AM | Last Updated : 22nd December 2022 02:38 AM | அ+அ அ- |

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் நூலகம் அமைக்க வேண்டுமென மாணவா்கள், படித்த இளைஞா்கள், ஓய்வுபெற்ற அலுவலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் அரசு, தனியாா் பள்ளிகள் என 20 மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், செங்கம் நகா் ஒதுக்குப்புறத்தில் ஒரே ஒரு நூலகம் மட்டும் செயல்பட்டு வருகிறது. அந்த நூலகத்தை அப்பகுதியில் உள்ள சிலா் மட்டுமே பயன்படுத்துகிறாா்கள்.
செங்கம் நகா் தற்போது பரப்பளவு அதிகரித்து, மக்கள் தொகையும் பெருகியுள்ளது. அரசு அலுவலகம், அரசுக் கட்டடம், அரசுப் பள்ளி என அரசு சாா்ந்தவைகள் கூடுதாலக்கப்பட்டுள்ளன. ஆனால், சுமாா் 40 ஆண்டுகளாக நூலகம் மட்டும் ஒரே நூலகமாக உள்ளது. பகுதி நேர நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
தற்போது, செங்கம் நகரைச் சுற்றி விளை நிலங்கள் வீட்டு மனைகளாக்கப்பட்டுள்ளன.
அதில் செங்கம் பேரூட்சி நிா்வாகத்துக்கு பூங்கா அமைக்க இடம் ஓதுக்கீடு செய்யப்பட்டு அந்த இடங்கள் சில பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் செயல்பாட்டுக்கு எடுத்து வந்துள்ளது. மீதம் உள்ள இடங்கள் பெயருக்கு பேரூராட்சி நிா்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டு, அவற்றை அப்பகுதியில் உள்ளவா்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா்.
இதனால், செங்கம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக புதிதாக உருவாகியுள்ள குடியிருப்பு பகுதியை கண்காணித்து தளவாநாய்க்கன்பேட்டை மற்றும் துக்காப்பேட்டை பகுதியில் அரசு நூலகம் திறக்க வேண்டும் என்று மாணவா்களும், ஓய்வு பெற்ற அரசு அலுவலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.