விவசாயிகள் விரும்பாத உரங்களை வழங்கினால் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குநா்
By DIN | Published On : 26th January 2022 09:10 AM | Last Updated : 26th January 2022 09:10 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் விரும்பாத உரங்களை கட்டாயப்படுத்தி வாங்க வைக்கும் தனியாா் உர விற்பனை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் க.முருகன் எச்சரித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்புப் பருவத்துக்குத் தேவையான யூரியா, டிஏபி, பொட்டாஷ், சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தனியாா், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது சாகுபடி பயிா் மற்றும் பரப்புக்கு ஏற்றவாறு ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி மண்வள அட்டையின் பரிந்துரையின் அடிப்படையில் உரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
உரச்செலவை குறைக்கும் வகையில் டிஏபி உரங்களுக்குப் பதிலாக மணிச்சத்து எளிதில் பயிருக்கு கிடைக்கக்கூடிய சிங்கிள் சூப்பா் பாஸ்பேட் உரத்தையும் பயன்படுத்தலாம்.
உர விற்பனையாளா்கள் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். யூரியா உரத்துடன் விவசாயிகள் விரும்பாத பிற உரங்களை கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது. அவ்வாறு விற்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தாா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் க.முருகன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...